உயர்நிலை – மொழிப்பாடத்திட்டம் – தமிழ்
மொழி மானுடத்தின் அடையாளம்; கருத்துப் பரிமாற்றத்திற்கான ஆற்றல் வாய்ந்த ஊடகம். ஒரு சமுதாயத்தின் அறிவு, பண்பாடு, வரலாறு, தத்துவம் ஆகியவற்றோடு இரண்டறக் கலந்ததாகவும் அவற்றின் கருவூலமாகவும் மொழி விளங்குகிறது. தனி மனிதர் சிந்திக்கவும் படைப்பாக்கத் திறன் பெறவும் மொழியே அடிப்படையாக அமைகிறது.
எல்லாக் குழந்தைகளும் இயல்பூக்கம் காரணமாகத் தாம் வாழும் சூழலில் இருந்தே மொழியறிவைப் பெற்றுக்கொள்கின்றனர். ஆயினும், அதனை முறையாகத் திறம்பட வளர்த்தெடுப்பதில் கல்விக்கூடங்கள் பெரும்பங்கு வகிக்கின்றன.
இதன்படி, மாணவர் தெரிந்துகொள்ள வேண்டிய அடிப்படைச் செய்திகள் தொடக்கநிலையில் (1-5வகுப்புகள்) கட்டமைக்கப்பட்டுள்ளன. அவ்வடிப்படைச் செய்திகள் குறித்த வகைப்பாடுகள், விளக்கங்கள், அவற்றின் வாயிலாக மாணவர் பெற வேண்டிய விழுமியங்கள் போன்றவை உயர் தொடக்க நிலையில் (6-8வகுப்புகள்) தரப்பட்டுள்ளன. சிந்தனையை மேம்படுத்திப் படைப்பாற்றலை வளர்க்கும்வகையில் ஆழம், அகலம், விரிவு கொண்ட செய்திகள், உயர்நிலையில் (9-10வகுப்புகள்) அளிக்கப்பட்டுள்ளன. அறிந்துகொண்ட செய்திகளையும் கருத்துகளையும் அலசி ஆராய்தல், திறனாய்தல், அவை குறித்து விரிவாகச் சிந்தித்தல், படைப்புத் திறனை மேம்படுத்தல், மொழியைப் பயன்பாட்டு அடிப்படையில் அணுகுதல் ஆகியன மேனிலை (11-12வகுப்புகள்) வகுப்புகளில் கட்டமைக்கப்பட்டுள்ளன.
தொடக்கநிலை (வகுப்பு ஒன்றுமுதல் வகுப்பு ஐந்துவரை), உயர்தொடக்க நிலை (வகுப்பு ஆறுமுதல் வகுப்பு எட்டுவரை) அடிப்படை மொழித்திறன்கள், தகவலறிதல், தொடர்பாடல், மொழியாளுமை, படைப்பு, திறனாய்வு, மொழிபெயர்ப்பு, சொல்லாக்கம், நடைமுறை இலக்கணம், புத்துலகிற்கான திறன் இவற்றைக் கருத்தில்கொண்டு, உயர்நிலைக்குரிய தமிழ்மொழிப் பாடத்திட்டம் கீழ்க்காணுமாறு வடிவமைக்கப்பட்டுள்ளது.
தமிழ்மொழிப் பாடம் கற்பிப்பதன் முக்கிய நோக்கங்கள்
- மொழியை இலகுவாகக் கையாளவும் அம்மொழிவழியே திறமையுடன் கருத்துகளை வெளிப்படுத்தவும் வழிகாட்டுதல்.
- மொழியைக் கற்கவும், மொழிவழிப் பிற பாடங்களைக் கற்கவும் அடித்தளம் அமைத்தளித்தல்
- பல்வேறு இலக்கிய இலக்கண நூலாசிரியர்களின் கருத்தின்வழி மொழியின் கட்டமைப்பைப் புரிந்துகொள்ளச் செய்தல்.
- தமிழில் சிந்திக்கவும். சிந்தித்தவற்றைத் தன்னம்பிக்கையுடன் தயக்கமின்றித் தமிழ்மொழியில் வெளிப்படுத்தவும் கற்பித்தல்.
- தமிழ்மொழி என்பது தகவலுக்கான ஊடகம் மட்டுமன்று; அது பண்பாடு, வாழ்வியல், நாகரிகக் கூறுகளுடன் பின்னிப் பிணைந்த உயிர்ப்புடைய வாழ்வியல்மொழி என்பதை உணரச் செய்தல்.
- இன்றைய தகவல் தொழில்நுட்பம், ஊடகங்கள், அறிவியல் ஆகியவற்றின் வளர்ச்சிகளில் தமிழ்மொழி தன்னைப் புதுப்பித்துக் கொள்வதற்குரிய, கலைச்சொற்களை உருவாக்கவும் உருவாக்கப்பட்ட சொற்களஞ்சியத்தைப் பொருத்தமுறப் பயன்படுத்தவும் பயிற்றுவித்தல்.
- தமிழ்மொழியைப் பயன்படுத்தும் போதெல்லாம் அதன் தொன்மையை உள்ளுணர்ந்து பெருமித உணர்வுடன் வெளிப்படுத்தப் பள்ளிகளிலும் வகுப்பறைகளிலும் வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுத்தல்.